''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

Tuesday, April 19, 2016

இந்தியாவின் அரிய பொக்கிஷம் விவசாயி!



கடந்த ஆண்டின் கணக்கீட்டின்படி இந்த உலகில் 36.5 கோடி ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது. இது 91 விழுக்காடு ஆசியா கண்டத்திலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவின் பங்கு இதில் 51 விழுக்காடு ஆகும்.

இன்று விவசாயிகள் கையில் இருக்கும் நெல் ரகங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரம். இது விவசாயிகளே விஞ்ஞானிகளாக இருந்து கண்டெடுத்தது. காலத்திற்கும், பருவத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும், மனிதனின் தேவைக்கும் ஏற்றவாறு பயனளிக்கக்கூடியது.

குறிப்பாக ஆறு மாதத்தில் விளைச்சலைத் தரும் வாடன் சம்பா, கட்டைச் சம்பா, மாப்பிள்ளை சம்பா, ஐந்து மாத்தில் விளையும் கிச்சடி சம்பா, கார்த்திகை சம்பா, மூன்று மாதத்தில் விளையும் குள்ளக்கார், கருங்குறுவை, செங்குறுவை செங்கல்பட்டுச் சிறுமனி ஆகிய நெல் ரகங்களாகும். இத்தகைய வளமான பின்புலத்தைக் கொண்ட விவசாயம், விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன என்பதினை கிழே காண்போம்.

விவசாயிகளும்... விளை நிலமும்…

நிலம் என்பது விவசாயிகளின் உயிர் நாடி, ஜீவாதாரம், அடிப்படை உரிமை இதற்கும் மேலாக நாம் இன்று சுவாக்கிற சுதந்திரக் காற்றுக்கான மையப்புள்ளி. ஆம்! சுதந்திரத்திற்கு முன் விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வரி கொடுத்த காலம். இன்னலுற்ற விவசாயிகள் மீது மேலும் ஒரு இடி இறங்கியது. விவசாயிகளிடமிருந்த நிலத்தை ஜமீன்தார்கள் பறித்து ஆங்கிலேயர்களுக்கு சாயக் கட்டிகள் சாகுபடி செய்து அடிமை சேவகம் செய்ய முன்வந்தனர். இந்த விசயம் காந்தி அவர்களின் கவனத்திற்கு வைக்கப்பட்டது. தொடங்கியது போராட்டம்.

குறிப்பாக ஆங்கிலேயர்கள் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய வனச் சட்டம் அவர்களது ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வனங்களும் அவர்களுக்கும், அவர்கள் அனுமதித்த நிறுவனங்களுக்கும் சொந்தமானது என்று கூறுகிறது. அதுநாள் வரையில் வனத்தையே நம்பி பிழைத்தவர்கள், விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டது. அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு வசதியாக கொண்டு வரப்பட்ட இச்சட்டம் நிலங்களை எந்த தங்கு தடையுமின்றி கையகப்படுத்தவும், அதை அவர்களின் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளவும் உதவியது.

சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கழித்து கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரிதினும் அரிதான காரியமாக ஆங்கிலேயர்களின் நில அபகரிப்புச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.

இதை “நிலம் கையகப்படுத்தல் மறுவாழ்வு, மறுகுடியமர்வுச் சட்டம் - 2013” என்று அழைக்கப்பட்டு விவசாயிகளுக்கு இதன் மூலம் சில சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குறிப்பாக நிலம் கையகப்படுத்தும் போது வளமான விவசாய நிலங்களுக்கு விலக்களிப்பது. “சமூக தாக்க மதிப்பீடு” மூலம் விவசாயிகளுக்கும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கும் ஏற்படுகிற தாக்கத்தை கணக்கில் கொள்ள வேண்டும். அரசுத்துறைக்கு நிலத்தை கையகப்படுத்தும் போது 70% விவசாயிகளின் ஒப்புதலையும், தனியார் துறை என்றால் 80 % ஒப்புதலையும் பெற வேண்டும். நிலம் நகர்ப்புறத்தில் இருந்தால் நான்கு மடங்கு இழப்பீடும், கிராமப்புறங்களில் இருந்தால் இரண்டு மடங்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது.

இதற்கிடையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. “வளர்ச்சி” என்ற வார்த்தையை மட்டுமே வைத்து வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் “நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்ற ஒரு கொடிய, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இருந்ததை விட கொடுமையானது என்று விமர்சிக்கப்பட்டு கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த சட்டத்தில் இடம் பெற்ற ஷரத்துகளாவன.

நிலம் கையகப்படுத்தும் போது ஐந்து துறைகளுக்கு விதிவிழக்கு என்று சொன்னது, அதாவது பாதுகாப்பு, தொழில் துறை, கிராமப்புற கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு, உள் கட்டமைப்பு போன்ற ஐந்து துறைகளுக்கு விதிவிலக்கு என்று சொன்னது. இது மட்டுமல்லாமல், கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த “சமூக தாக்க மதிப்பீட்டை” முற்றிலுமாக ரத்து செய்தது. மேலும் நிலத்தை பறிகொடுத்தவர்கள் எந்தக் காரணம் கொண்டும் நீதி மன்றத்தை நாடமுடியாது என்று கூறி விவசாயிகளின் குரல் வலையை நெறித்தது. விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் எதிரான இந்தச் சட்டம் விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் குரல் வலிமையானது என்பதை அரசு உணர்ந்தது?!

விவசாயிகளும்… கார்ப்பரேட்களின் சூழ்ச்சியும்…

இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு இரண்டு காரணிகள் முக்கியமானது ஒன்று பணம். இன்னொன்று நிலம். அவர்களுக்கான பணத்தை ஆட்சியாளர்களின் கனிவுப் பார்வையின் கீழ் பெற்றுவிடுவார்கள். நிலம்தான் பிரச்சனை நிலத்தைப் பொருத்தவரை ஆகப்பெரும்பான்மையான பரப்பளவு உழைக்கும் விவசாயிகளிடம் உள்ளது. இதை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டுமானால் ஒன்று அவர்களுக்கு உழவுத் தொழிலில் நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது ஆட்சியாளர்களின் துணை கொண்டு சட்டம் இயற்றி நிலத்தை பறிக்கவேண்டும். ஆண்டாண்டு காலமாக இந்த மண்ணில் வாழும் விவசாயியை அப்புறப்படுத்த வேண்டும். இந்த மண்ணுக்கும் அவனுக்குமான உறவை அறுத்தெறிய வேண்டும்.

இத்தகைய சூழ்ச்சியின் தொடக்கமாகத்தான் இயற்கையாக விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளை “பூச்சிக்கொல்லி” மருந்து உபயோகிக்க தூண்டி மண்ணை மலடாக்கியது. "மரபீனி மாற்றம்" என்கிற போர்வையில் அதிக விளைச்சலை மேற்கோள்காட்டி உணவையும், நிலத்தையும் நஞ்சாக்கும் வேலையை செவ்வனே செய்தது. டிராக்டர் வண்டிகளால் அதிக உற்பத்தி என ஆசை காட்டி விவசாயத்தை அதிக செலவுகொண்ட தொழிலாக மாற்றி விவசாயிகளை கடன்காரனாக்கி தமது சூழ்ச்சியை அரங்கேற்றினார்கள். கார்ப்பரேட்களின் சூழ்ச்சி ஒரு புறம், பருவநிலை மாற்றம் மறு புறமாக விவசாயி விழி பிதுங்கி தத்தளிக்கிறான். கடந்த ஆண்டு பருவமழையின் சராசரி 12% க்கும் குறைவு.ஆனால் உற்பத்தியோ முத்திய ஆண்டை விட 3% மட்டுமே குறைவு. அதாவது 2014 – 15 ஆம் ஆண்டின் உணவு உற்பத்தி 25.70 கோடி டன் என்கிற உச்சத்தை தொட்டு சாதனை நிகழ்த்தினான் நமது விவசாயி.

இந்தியா கண்டெடுத்த அரிய பொக்கிஷம்:

இந்தியாவைப் பொருத்தவரை மொத்த மக்கள் தொகை 125 கோடிக்கும் மேல். இதில் சுமார் 60% பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். விவசாயிகளின் மேன்மையை இந்திய ஆட்சியாளர்களை தவிர்த்து அனைத்து நாடுகளும் அறிந்து வைத்துள்ளன. அமெரிக்காவில் அதிகபட்சமாக உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை மொத்தம் 25,000 இருக்கும். அவர்களுக்கு அந்த நாடு கொடுக்கும் மாணியம் நபர் வரியாக 50,000 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 200 டாலர்கள் மட்டுமே அதுவும் மகாராஷ்டிரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக 4000 கோடி ஒதுக்கியது. இந்த நிவாரணம் 26 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பணம் பெரும் அளவில் அரசுக்கு திரும்பியிருக்கிறது ஏன் என்று கேட்கையில் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று அரசு சப்பைக் கட்டி கட்டியது.

இத்தகைய போதாமைக்கு மத்தியில் விவசாயி தான் ஒரு அரிய பொக்கிஷம் என்று நிரூபித்திருக்கிறான். ஒட்டு மொத்த சாகுபடி பரப்பில் வானம் பார்த்த பூமியாக 67% பரப்பும், 37% மட்டுமே பாசன வசதிபெற்ற நிலத்தை வைத்துக் கொண்டு வருடா வருடம் உற்பத்தியில் சாதனை நிகழ்த்துகிறான். மேய்ச்சல் நிலங்கள் “ரியல் எஸ்டேட்” என்கிற பெயரால் கூறுபோட்டு விற்கப்படும் வேலையில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி 1943 இல் 19.87 கோடியாக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை இன்று 52.9 கோடியாக உயர்ந்திருக்கிறது அதிலிருந்து பெறப்படும் பால் உற்பத்தியை கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காகியிருக்கிறது. இத்தகைய அரிய வரம் நிறைந்த ஒரு துறையை பொய்யான புள்ளி விவரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி என்கிற பெயரால் விவசாயிகளை அழித்து முடமாக்க நினைக்கின்றனர்.


“உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை பொய்யைத் தொழுது அடிமை செய்பவருக்கே செல்வம் எல்லாம் உண்டு”

என்று சுதந்திரத்திற்கு முன் பாரதியார் பாடிய பாடல் நிகழ்காலத்திற்கான மிகவும் பொருத்தமான வரிகள்!

பா.செ. சிராஜுத்தீன்
ஏப்ரல் 2016 "சமூகநீதி முரசு" மாத இதழ்