''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

Tuesday, December 29, 2015

உலகை உலுக்கிய அய்லானின் மரணம்...



ஒரு சிறந்த புகைப்படத்தைப் பற்றி தலை சிறந்த புகைப்பட நிபுணர் “ரகுராய்” அவர்கள் கூறியதாவது “மிகவும் வலுவாகவும் மனதை உருக்கும் வகையிலும் இருக்கும் ஓர் உணர்ச்சியின் வெளிப்பாடு, நடந்து முடிந்த ஒரு துயரத்தின் மொத்தக் கதையையும் ஒரே புகைப்பட்த்தில் சொல்வது போல இருந்தால் அது ஒரு சிறந்த புகைப்படம்! என்றார்.”

துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயதுச் சிறுவன் அய்லானின் மரணத்தை ஒட்டி எடுக்கப்பட்ட புகைப்படம். அது உலக மனசாட்சியை எவ்வாறு உலுக்கியது என்பதினை உற்று நோக்கினால் தெரியும். ஒரு மோசமான புவி அரசியலில் சிக்கித் தவிக்கும் சிரியா மற்றும் அந்த நாட்டிலிருந்து வெளியேறும் அகதிகளின் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்கையில் அய்லானின் மரணம் உலகை புரட்டிப் போட்டது. முஸ்லிம்களை தமது நாட்டில் அனுமதித்தால் நாட்டுடைய மதக் கலாச்சாரம் அழிந்து விடும் என்று வெறுப்பு வார்த்தை கூறிய ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் சொந்த நாட்டு மக்களின் வற்புருத்தலால் அகதிகளுக்கான கெடுபிடியைத் தளத்தினார்.

சிரியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் அகதிகளாக துருக்கி, கிரீஸ் நாடுகளைக் கடந்து மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியில் அடைக்கலம் தேடுகின்றனர். கி.பி. 2011 இல் தொடங்கி ஏறத்தாழ கடந்த நான்கு ஆண்டுகளில் சிரியா உள் நாட்டுப் போரில் 4 லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாகவும், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்து விட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆட்சியாளர் நடுநிலை தவறும்போதும், தன் நாட்டு மக்களை மதம் சார்ந்தும், அதன் உட்பிரிவுகள் சார்ந்து பார்ப்பதும் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதும், தன் நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களை துன்புறுத்துவதற்கும், இதற்க்கு தான் சார்ந்த மதத்தை பயன்படுத்திக் கொள்வதும், அதற்கு ஆதரவாக தனக்குத் தோதான அண்டை நாடுகளை தனது தவறை மறைத்து ராஜ தந்திர பேச்சின் மூலம் ஆதரவு தர வைத்து ஆட்சி நடத்தும் போதுதான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன. இத்தகைய கீழ்த்தரமான மதம் மற்றும் பிரிவு அரசியல் செய்யும் ஆட்சியாளர்களுக்கு சிரியா ஒரு உதாரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அரபு நாடுகளும்
அமெரிக்காவை பொறுத்தவரையில் அரபு நாடுகள் என்பது ஒரு கால்பந்தாட்டப் விளையாட்டு போட்டி போன்றது! அரபு நாடுகளை சன்னி, ஷியா என்று இரு வேறு கூறுகளாக பிரித்து அந்த இரண்டு அணிக்கும் தலைமையேற்கும் அமெரிக்கா.

சில நேரத்தில் எதிரணிக்கு கோல் போடும். சில நேரம் எதிரணிகளை வைத்து தனது ஆதரவு அணிக்கு கோல் போட்டுக்கொள்ளும். இந் இரண்டிலுமே லாபம் அமெரிக்காவுக்கே! உதாரணமாக சன்னி பிரிவு ஆட்சி செய்கிற சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி சிரியாவுக்கு எதிரணியில் நிறுத்தும்! மறுபுறம் ஈராக்கில் சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுஸைனை அங்குள்ள குர்துகளுக்கும், ஷியாக்களுக்கும் எதிரானவர் என்று கூறி அந்த நாட்டில் பிரிவிணை ஏற்படுத்தி ஈராக்கை தனது அதிகாரத்தின் கீழ் கோண்டு வந்து சதாமை தூக்கிலிட்டு விட்டு தனது அத்துமீறலுக்கு நியாயம் கற்பிக்கும்.

ஆஃப்கானிஸ்தானில் உஸாமா பின் லேடனை வைத்து சோவியத் யூனியனுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு உதவி செய்த அமெரிக்கா தனது குள்ளநரித்தனத்தை எதிர்த்தார் என்பதற்காக ஆஃப்கானிஸ்தானுக்குள் புகுந்து நாட்டையே களவாடி  தனக்கு கைப்பாவயான ஒரு அரசை அமைத்துக் கொண்டது. ஆக அமெரிக்கா என்றுமே நியாயத்தின் பக்கமே நிற்கும். மனித உரிமை மீறலை என்றுமே அனுமதிக்காது என்கிற கேட்டுக் கேட்டு புளித்துப்போன அதே பல்லவியை மீண்டும் ஒருமுறை உண்மை போல ஓலமிடும். ஆனால் அதன் பின்னால் இருக்கும் மதம் மற்றும் ஆயுத வியாபார அரசியல் நுட்பமானது. எளிதில் கண்டெடுக்க முடியாத அமெரிக்காவின் ராஜ தந்திரம். மக்களை எளிதாக நம்பவைக்கும் மத அரசியல்.

அப்படித்தான் ஷியாவையும் சன்னி பிரிவையும் எதிரெதிர் துருவத்தில் வைத்து சண்டையிட வைத்து பார்வையாளராக வேடிக்கை பார்க்கிறது அமெரிக்கா!

சிரியாவை ஆளும் ஆஸாத்தும், ஈராக்கை ஆண்ட சதாம் ஹுஸைனும், இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படும் உஸாமாவும் உண்மையாகவே தவறு செய்திருந்தால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் குற்றவாளிகள்.அவர்கள் செய்த குற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையில்  ஒப்படைப்பதுதான் முறை. சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தட்டும். 
அதை விடுத்து தனக்கு எதிரனியில் நிற்கும் நாடுகளையும் மேலும் இயற்கை வளங்களை களவாடும் போது அதை எதிர்க்கும் நாடுகளையும் அவர்களுக்கு எதிராக பொய்களை அவிழ்த்து விட்டு அண்டை நாடுகளிடம் ஆயுதம் கொடுத்து சண்டையிடச் சொல்வதும், உள் நாட்டிலேயே ஆட்சிக்கெதிரான புரட்சியை தூண்டி விட்டு அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து தன் ஆயுத வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்வதும் எவ்வகையில் நியாயம்?

இதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அரபு நாடுகள் இல்லை என்பது மிகப்பெரும் கைசேதம்.

குறிப்பாக இராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகையில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. ஆண்டொன்றுக்கு 61,870 கோடி டாலர். இது அந்த நாட்டு ஜிடிபியில் 3.8% இது இந்தியா செலவிடும் தொகையை விட 12 மடங்கு அதிகம். அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி ஆண்டொன்றுக்கு 620 கோடி டாலர்.  இது இறக்குமதியை விட 10 மடங்கு அதிகம் இதுதான் அமெரிக்காவின் யதார்த்தமான உண்மையாகும்.

மத்திய கிழக்கு நாடுகளும் சவால்களும்
அரேபிய தீபகற்பத்தில் ஆகப் பெரும்பான்மையான வளம் கச்சா எண்ணெய்தான் என்றாலும் அதற்கான வருவாயை வைத்துக் கொண்டு நாட்டின் இயற்கை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை கட்டியமைக்க முடியாது. உதாரணமாக இராக்கில் கடந்த மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டின் வெப்பம் 120டிகிரியாக பதிவாகி இருந்தது.

இத்தகைய மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் விசயத்தில் இராக் பிரதமர் ஹைதர் அலி அபாதி கண்துடைப்புக்காக துணை அதிபர்களை பதவியிலிருந்து நீக்கி விட்டு துணை பிரதமர் அலுவலகத்தை மூடி தனது பணியை முடித்துக் கொண்டார்.

ஈரானில் 2014 இல் அதிபராக பதவியேற்ற அதிபர் ஹாஸன் ரஹானியின் முதல் அமைச்சரவை முடிவு அணுக்கொள்கை பற்றியது அல்ல! மாறாக நீர் நிலைகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றியே முதலில் முடிவெடுக்கப்பட்டது. ஈரானின் பெரிய உப்பு நீர் ஏரிகளில் ஒன்றான ஓரமியா ஏரி நாட்டில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றத்தின் காரணத்தால் கடந்த பத்தாண்டுகளில் 80% அளவில் நீராதாரத்தை இழந்து சுருங்கி விட்டது.

சவூதி அரேபியாவின் மக்கள் தொகை 1975 இல் இருந்ததைப் போல இப்போது மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஒரு புறம். மேலும் நடப்பாண்டில் 130 பில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறை ஏற்படும் என்று சர்வதேச நிதியம் கூறுகிறது. ஆக சிரியா, துருக்கி ஏமன் ஆகிய நாடுகளும் உள்நாட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றன. இதற்குப் பின்னணியில் அமெரிக்கா, ஐரொப்பாவின் ஏகாதிபத்திய சூழ்ச்சிதான் மிகப் பெரும் காரணம்.

கச்சா எண்ணெய் பொருட்களின் விலையை அமெரிக்காவே நிர்ணயம் செய்வது, வளர்ந்த நாடுகள் என்கிற போர்வையில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் உபயோகப்படுத்திய மின் சாதனங்களை கடலில் கொட்டுவது என வளர்ந்த நாடுகளின் நடவடிக்கைகள்  பெரும் சவால்களாக விளங்குகின்றன.வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை அரபுநாடுகளும் சந்திக்கின்றன. அதேவேளையில் பருவநிலை மாற்றமும், ஆட்சியாளர்களின் சமுக ஸ்திரமற்ற  செயல்களும் மக்களை போராட்டத்திற்கு இழுத்துச்செல்கிறது  

அறவழியில் தங்கள் தார்மீக உரிமைகளையும் அடிப்படைத் தேவைகளைகயும் கேட்டுப் போராடும் மக்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதை விட்டு விட்டு அறவழி போராட்டக்காரர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்துகின்றன அரசுகள். அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுக்கும் போது ஆட்சியாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வளர்ந்த நாடுகளை துணைக்கு அழைக்கிறார்கள். இதையே சாக்காக வைத்து தங்களின் ஆயுத வியாபாரத்தை பல மடங்கு பெருக்கி கல்லாக் கட்டுகிறது அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களும் அரசுகளும்.

அரசுகளுக்கும் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களுக்கும் இடையே சிக்கி தனது உறவுகள், உடமைகள் உட்பட கடைசியில் உயிரையும் விடுவது பொதுக்கள் தான்! அரசுகளுக்கும், ஆயுத தாரிகளுக்கும் இவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் “பொதுமக்களின் உயிர் துச்சமென மதிக்கிறது.” ஆளுகின்ற அரசு “நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மதம் மற்றும் இன அடிப்படையில் பார்க்காமல் அது தனது நாட்டின் குடிமக்களது உரிமை மற்றும் அடிப்படை தேவை என்பதை உணர வேண்டும். பிரச்சனைகளை ஒடுக்குவதை விட அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதை சரி செய்வது ஆட்சியாளர்களின் கடமை.” நியாயமான கோரிக்கைகள் மறுத்து குரல் வலையை நெறிக்கும் போதுதான் அசாதாரணமான நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

அய்லானின் மரணம் உணர்த்தும் செய்தி!
14 கோடியே 90 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்த பூமியில் 3 வயதே ஆன பிஞ்சுக் குழந்தை அய்லானுக்கு இடமில்லாமல் போனது யாரால்?

இது போன்ற மனதை கலங்கடிக்கும் அய்லான்களின் மரணத்தின் மூலம் அரசுகள், ஆட்சியாளார்கள், அதிகாரவெறி பிடித்தவர்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்திருக்கிறார்களா? என்றால் இல்லை!!!

வரலாறுகள் பதிவு செய்திருப்பது போல் அய்லான்களின் மண்ணறைகள் மேல் தங்கள் அதிகார பீடத்தை அமைத்துள்ள அரசுகளுக்கும், ஆட்சியாளார்களுக்கும், ஆயுதக்குழுக்களுக்கும், அதிகார வெறிகொண்டவர்களுக்கும் இதயம் இருக்க வேண்டிய இடத்தில் இரும்புகள் இருப்பது வேதனைதான்.

ஆனாலும் தங்கள் இதயங்களில் ஈரம் கொண்டு மனிதத்தை, அமைதியை, சமாதானத்தை, சக வாழ்வை நேசித்து அய்லான்களுக்காக கண்ணீர் சிந்தும் மனிதர்கள் ஜனநாயகம், தேர்தல், ஆட்சிமாற்றம்  என்கின்ற துருப்புசீட்டை பயன்படுத்தி ஆட்சியாளர்களை அமைதியை நோக்கி இழுத்து வருகின்றனர். இருப்பினும் பல ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு வகையில் நாட்டு மக்களை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகின்றனர்.

“அணு ஆயுதம்” இருப்பு பற்றிய “ஸ்டாக் ஹோம் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்” என்கிற அமைப்பு செய்த ஆய்வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவில் கடந்த ஆண்டு 90 லிருந்து இந்த ஆண்டு 110 ஆகவும், பாகிஸ்தானில் 100 லிருந்து 120 ஆகவும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நேரத்தில் இங்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

உலகில் ஆகப்பெரும்பான்மையான நாடுகள் அடித்தட்டு விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக செலவிடும் நிதியை குறைத்து விட்டு நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டும் ஆட்சியாளார்கள் இருக்கும் வரையில் அய்லான்களின் மரணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதை கண்டும் காணாமலும் சர்வதேச சமூகம் மௌன சாட்சியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இது அய்லான்களின் மரணத்தை மிஞ்சிய துக்கரமான செய்தி ...

பா.செ. சிராஜுத்தீன்
நவம்பர் 2015 "சமூகநீதி முரசு"இதழ்

Monday, December 14, 2015

காந்தியும் பன்முக இந்திய தேசமும்


கி.பி. 1869ல் பிறந்த காந்தியவர்கள் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்; தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டே “நேட்டிவ் ஒபினியன்” என்ற சமூக இயக்கத்தைத் தொடங்கி நடத்தியும் வந்தவர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து தனது 45 வயதில் போராட்டப் பயணத்தை முடித்துக்கொண்டு கி.பி. 1915இல் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்த காந்திக்கு, இறுதியாக ஒரு கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்படுகிறது. அதுவும் அந்தக் கூட்டமானது ஒடுக்கப்பட்டவர்களான துப்புரவுத் தொழிலாளர்கள் கூட்டியதாகும்.
 
அதில் அவர் பேசும்பொழுது, “நீங்கள் எங்கள் சகோதரர்கள், உங்களை அவமரியாதை செய்வது எங்களது தகுதி எவ்வளவு குறைவானது என்பதைத்தான் காட்டுகிறது. அது பெரிய அறப்பிழை” என்பதனைச் சுட்டிக்காட்டி மனிதன் செய்கிற தொழில் சார்ந்த பிரிவுகளைக் கொண்டு அவனை வேறுபடுத்துவது என்பது மனிதாபிமானம் உள்ள எவருக்கும் தகுதியற்றது என்றும் உலகில் அறத்திற்கு எதிரானது என்பதினையும் எடுத்துரைத்தார். ஏற்றத் தாழ்வற்ற சமூகமே மேன்மையடையும் என்கிற கொள்கையே அவரின் தென் ஆப்பிரிக்க இறுதியுரையாக இருந்தது.

காந்தி இந்தியா வருகை:
கி.பி. 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பம்பாய் துறைமுகத்தில் காந்தி வந்திறங்கியபோது இந்தியாவிற்கான சுதந்திரப் போராட்டத்தினை எவ்வகையில் முன்னெடுப்பது என்கிற சிந்தனை அவரை உலுக்கியது. ஏனெனில் இந்தியா என்பது ஒரு பன்முகக் கலாச்சாரமும் பல சமயங்கள் நிறைந்ததுமான ஒரு நாடு. இதை வழிநடத்திச் செல்வது என்பது ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது என்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதுதான் காந்தியின் உண்மையான ஆளுமை. அது மட்டுமில்லாமல் அதற்கான அடித்தளத்தை அமைப்பதற்குப் பலதரப்பட்ட மக்களையும் ஒன்றிணைப்பதற்குப் பொதுவான ஒரு தத்துவ முழக்கம் தேவைப்பட்டது அவருக்கு. ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் “சத்தியம்“ என்கிற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் இதுவே “சத்தியாக்கிரகமாக” வலுப்பெற்றது. மேலும் 'சத்தியம்' என்ற அந்த மையப்புள்ளியில் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைக்கிறார். இதனூடாகவே தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்கிற புரிதலும் அதற்கான முன்னெடுப்பும் காந்தி அவர்களின் அறப்போரின் சாராம்சமாகும்.

காந்தியும் கோகலேவும்:
காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்த 21 ஆண்டுகளில் அவரின் போராட்ட குணமும் மக்கள் சமூகவியலின் இயல்பான பார்வையும் கோகலேவைக் கவர்ந்தது. ஆகையால் காந்தியை இந்தியா வருமாறு அழைத்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்கனவே முற்றிலுமாக அறிந்திருந்த கோகலே அவர்கள் முதன் முதலாக காந்திக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையின் புரிதலுக்காகச் சொன்ன வழி, “காதைத் திறந்துக் கொண்டு, வாயை மூடிக்கொண்டு, இந்தியாவை ஒரு வருடம் சுற்றுங்கள்”. கோகலேயின் வேண்டுக்கோளுக்கிணங்க காந்தி இந்தியாவில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். இந்தியாவைப் புரிந்துக்கொள்ளத் தொடங்கப்பட்ட நீண்ட பயணத்தில் ஏழைகளோடு ஏழையாகவும் மூன்றாம் வகுப்பு இரயில் பெட்டிகளிலும் பயணம் செய்தார். இதில் தான் பெற்ற அனுபவத்தில் தன்னைத் தானே இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார் என்றால் மிகையாகாது. காந்தி அவர்கள் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கோகலேவுக்குக் கொடுத்த வாக்குறுதியைத் தன்னுடைய சுற்றுப்பயணத்தின் வாயிலாக நிறைவேற்றித் தந்தார்.

காந்தியும் தாய் மொழியும்:-
காந்தி அவர்கள் தன்னுடைய தாய் மொழியான குஜராத்தியை மிகவும் நேசித்தவர். அதேபோல் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர். ஒருநாள் குஜராத்தி மேட்டுக்குடி வர்க்கம் அவருக்கு அளித்த வரவேற்பில் எல்லோரும் காந்தியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆங்கிலத்தில் பேசி முடிக்க, அவரோ தன் பதிலுரையை குஜராத்தி மொழியில் தொடங்கினார். “குஜராத்திகள் கூடியிருக்கும் ஒரு சபையில் ஆங்கிலத்தில் பேசத் தேவை என்ன?” என்று ஆரம்பித்தவர் முழுமையாக குஜராத்தி மொழியிலேயே பேசி முடித்தார். அவர் கல்விக்காக ஆற்றிய பங்கில் ”ஆதாரக் கல்வி” என்பது முக்கியமானது. இதில் மாணவர்கள் தங்களுடைய தொடக்கக் கல்வியைத் தமது தாய்மொழியிலேயே கற்க வேண்டும் என்று வற்புறுத்தியவர் அதற்கான பாடத் திட்டத்தினையும் இந்தியாவின் புறச்சூழல், சமூகச் சூழலுக்கேற்றவாறு திறம்பட வகுத்துத் தந்தவர் ஆவார்.

காந்தியும் விவசாயிகளும்:-
காந்தி அவர்கள் தனது கூடுதல் கவனத்தை விவசாயிகளுக்காகச் செலுத்தியவர். அவர்களைப் பற்றியே சிந்தித்தவர். கி.பி. 1921ஆம் ஆண்டு மதுரை பயணத்தின் போது அவர் தமிழக உழவர்கள் அணிந்திருந்த உடையைப் போன்று  தானும் அணிந்து, விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகவும் அவர்களின் குரலாகவும் இருந்தவர். கி.பி. 1916இல் காசியில் அன்னி பெசன்ட்டும் மாளவியாவும் நிர்வகித்து வந்த இந்துப் பல்கழைக்கழக மத்தியக் கல்லூரித் திறப்பு விழாவில் பேசுவதற்குக் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட காந்தி அவர்கள் அந்தப் பேச்சின் மையக் கருத்தாக விவசாயிகளைப் பற்றிப் பேசினார். அது பேச்சாக மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்கான உறுதிப் பிரகடனமாகவும் அமைந்தது. “இந்தியாவில் எந்த நகரிலும் ஒரு பிரமாண்ட மாளிகை எழும்பொழுது எனக்குள் பொறாமை எழுகிறது. ஆஹா… இவ்வளவும் நம்முடைய விவசாயிகளிடமிருந்து வந்த பணம் அல்லவா? விவசாயிகளின் உழைப்பைப் பறித்துக் கொண்டாலும் சரி, பிறர் பறிக்க இடம் கொடுத்தாலும் சரி நம்மிடம் உண்மையான சுயாட்சி உணர்வு இருக்க முடியாது. குடியானவர்களால்தான் நமக்கு விடுதலை ஏற்பட வேண்டும். பணக்கார மிராசுதாரர்களோ, மருத்துவர்களோ, வழக்குரைஞர்களோ சுயாட்சியைப் பெற்றுத் தரப் போவதில்லை” என்கிற அவருடைய எதேச்சையான, உள்ளார்ந்த கருத்துடைய பேச்சு, பிற்காலத்தில் செயல்வடிவம் கண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு மேற்கூறிய மேல்தட்டு மக்களின் பங்களிப்பைக் காட்டிலும் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் சிறுபான்மையினரும் விவசாயிகளும் வழங்கிய பங்களிப்பு என்பது பன்மடங்கு கூடுதலானது என்பதுதான் உண்மை. இதை முன்னரே உணர்ந்தவர் காந்தி.
காந்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மையப்புள்ளி. இது அவரின் தலைமைக்கான மமதையை அவருக்கு ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக தனது சகாக்களைத் திறம்பட செயலாற்றப்ப் பணித்தவர்; அவர்களுடைய ஆளுமைக்குப் பணிந்தவர். வசீகரப் பேச்சுக்குச் சொந்தக்காரரான தன் சகா நேருவை, பொதுக் கூட்டங்களுக்கு அனுப்பிப் பயன்படுத்திக் கொண்டார். பட்டேலின் நிர்வாகத் திறனை காங்கிரஸ் கட்சியைக் கட்டமைத்து வழி நடத்தவும் ஜே.சி. குமரப்பாவின் உழைப்பை கிராம வளர்ச்சிக்கும் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் தீராத் தாகமான இந்தியர்களின் கல்வி வளர்ச்சியை அவரிடம் ஒப்படைத்து, பலதரப்பட்ட தலைவர்களிடம் இருந்த பல்வேறு திறமைகளையும் உரிய வகையில் காந்தி பயன்படுத்திக்கொண்டார்.
மாபெரும் இந்திய தேசத்தை எப்படி ஒரு மதச்சார்பற்ற நாடு என்று காந்தி எண்ணினாரோ அதேபோன்று அந்த தேசத்திற்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்தபோதும் சாதி, மத, மொழி பேதம் பார்க்காமல் அவரவர்கள் சார்ந்த துறைகளுக்கும் ஈடுபாட்டுக்கும் மதிப்பளித்தவர் காந்தி. ஆக, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் இந்திய தேசம் என்கிற பொதுப் புள்ளியில் இணைந்தவர்கள். அவர்களை அவர்கள் இனம் சார்ந்த தலைவர்கள் உரிமை கொண்டாடுவதும் தம் மாநிலத்தில் அல்லது ஊரில் பிறந்தார் என்பதற்காக ஒருவர் பிறந்த மண் சார் மக்கள் உரிமை கொண்டாடுவதும் அவர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துவதாகும். அதைவிட மோசமானது அவர்கள் மதம் சார்ந்த பின்புலத்தை முன் நிறுத்துவதும் அதில் தன்னை வளர்த்துக் கொள்வதும்!

- பா. செ. சிராஜுத்தீன்
18 ஆகஸ்ட் 2015 "சத்தியமார்க்கம்.காம் "