சமீபத்தில் தினசரிகளில் வெளி வந்து பரபரப்பாக பேசப்பட்ட செய்தி “மகாராஷ்டிரா மாநிலத்தில் லாத்தூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் கலவரத்தை தடுக்க போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவாகும்.” எத்தனையோ சிறு சிறு குழாயடிச் சண்டைகள் காவல் நிலயம் வரை சென்று சமாதானம் பேசப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசயத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்களுக்கு மத்தியில் சச்சரவுகள் நிகழும் கலவரம் வெடிக்கும் என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசும், காவல் துறையும் சேர்ந்து இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது மிகவும் விசித்திரமானது. இந்திய ஜனநாயகம் என்கிற கட்டமைப்பை மழுங்கடித்து சர்வாதிகார செயலுக்கு இட்டுச் செல்லும் ஒரு தவறான பாதை ஆகும்.
உணவு
இல்லாமல் வாழ முடியும் தண்ணீர்
இல்லாமல் ஓரிரு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. 50 ஆண்டுகளுக்கு
முன்பு நமது கிராமங்களிலும்,
நகரங்களிலும் உள்ள கிணறுகளில் தண்ணீரை சாதாரணமாக அள்ளலாம் அந்த
அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும். ஆனால் இன்று கிணறு
என்கிற வார்த்தை சுத்தமாக மலுங்கடிக்கப்பட்டு ஆழ்த்துழை வழியாக நீரை உறிஞ்சுகிறோம்.
இந்திய மாநகரங்களை பொறுத்தவரை கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு
ஒருநாள் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது வருவதை ஏற்கும் மனநிலைக்கு நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம், இன்றைய தலைமுறைக வற்றிய வாய்க்காலையும், ஆற்றையும், வானம்
பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கிறது. வரும் காலங்களில் விவசாயம்
என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை.
தமிழ்நாட்டை
பொறுத்தவரை கார்போரேட்களை தொழில் செய்ய ஈர்க்கும் சந்தை நுகர்வுப்பொருளாக
“குடிதண்ணீர்” மாறியுள்ளது. இதன் வகையே தண்ணீர் பாக்கெட் , தண்ணீர்
பாட்டில் , தண்ணீர் கேன் என்று இப்போது பணம்
பண்ணும் தொழிலாகிவிட்டது. வற்றாத ஜீவநதிகளைக் கொண்ட நம் இந்திய நாட்டில் தண்ணீர் பஞ்சத்திற்கான அடிப்படை கூறுகளையும், தற்போதுள்ள நீர் நிலைகளின் அவலங்களையும் மழைநீர் சேமிப்பின் குறைகளையும் அலசுவது ஏதுவாக இருக்கும்.
மழையும், மழை நீர் சேமிப்பும்:
நாட்டின் மிகப்பெரும் நீர்நிலையாக கடல் மற்றும் ஆறுகள் சூரியனின் வெப்பத்தினால் ஆவியாகி நீராவியாக மாறி மேலெழுந்து வானத்தில் இருக்கும் மேகங்களில் அதிகமாக சேரும்போது குளிர்ச்சியடைந்து நீராக மாறுகிறது. இது அனைத்தும் ஓரிடத்தில் திரளும்போது குளிர்ச்சியாகி “மழைத் துளிகளாக” பூமியை வந்தடைகிறது. இதன் அளவு கண்டத்திற்கு கண்டம் வேறுபட்டாலும் ஒரு நாட்டுடைய நீர் வளம் இந்த அரிய மழையை சேமித்து வைப்பதில்தான் பொதிந்துள்ளது. உதாரணமாக ஐந்து ஏக்கர் நிலப்பரப்பு உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அங்குலம்(Inch) மழை பெய்தால் போதும் அந்த கிராமத்திற்கு ஐந்து இலட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். இதை சரியாக சேமித்து வைப்பதற்கான போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததாலும், அதை ஏற்படுத்த வேண்டிய அரசின் பொறுப்பின்மையாலும் மேலும் மண் சாலைகளை வளர்ச்சி என்கிற பெயரால் தார்ச்சாலைகளாக்கி இன்று சிமெண்ட் சாலைகளாக பளிச்சிடுகிறது. ஏரிகளை பாதுகாக்க
வேண்டிய அரசாங்கமே அவற்றை பட்டா போட்டு வீடு மற்றும் அரசு அலுவலகங்கள், பஸ்
நிலையங்கள் கட்டுகிறது. அதனால் மண்ணில் விழக்கூடிய மழைநீர் பூமியில் தங்கும் வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி கடலில் சென்று சேருகிறது. பருவமழை பொய்த்தது மட்டுமே நமது தண்ணீர்
பஞ்சத்திற்கான காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி
வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை என்பதே உண்மை. மழைக்காலங்களில் மழைநீர்
ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் எங்கும் போகும் வழி தெரியாமல் குடியிருப்பில் புகுந்து கடலில்
கலந்து விடுகிறது.
நீர் நிலைகளும் அதன் அவலங்களும் :
இந்திய நீர் நிலைகளைப் பொறுத்தவரை தரமான நிலத்தடி நீரும் பருவ காலங்களில் எத்தகைய மழை மழை பொழிவு ஏற்பட்டாலும் அதை சேமித்து வைப்பதற்கான கொள்ளளவு நிறைந்த அணைகளும் இருக்கின்றன. ஆனால் இதற்கு தண்ணீர் வருகின்ற வழித்தடங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இப்படியே போனால்
என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக
இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 40,000 குளங்களின் மூலம் 1950 களில் 10
இலட்சம் ஹெக்டேர்களில் இருந்த பாசன பரப்பு தண்ணீர் பற்றாக்குறையால் வெறும் 5 இலட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது. பல இடங்களில் குளங்கள் இருக்கும் தடமே தெரியாமல் அழிக்கப்படுள்ளது.
இந்திய தண்ணீர் தேவையும், பஞ்சமும் :
இந்தியாவைப் பொருத்தவரை ஒருபுறம் தனிமனிதனுக்கான தண்ணீர் தேவை அதிகரிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் மத்திய நீர் வள அமைச்சகத்தால் 2001 இல் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி தனிநபர் ஒருவருக்கு கிடைத்த நீரின் சராசரி அளவு 1816 கியூபிக் மீட்டர் இது இப்போது 1544 கியூபிக் மீட்டராக குறைந்து விட்டது. இது சர்வதேச அளவில் தீர்மானிக்கப்பட்ட 1700 கியூபிக் மீட்டர் அளவை விட குறைவாகும் என சுட்டுகிறது. இந்திய பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கையில் இத்தகைய தண்ணீர் பஞ்சம் உணவு உற்பத்திக்கான பற்றாக்குறையையும் விவசாயிகளின் வீழ்ச்சிக்கான தொடக்கப் புள்ளியாக ஆகிவிடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது.
மனிதனுக்கான குடிநீரைப் பொருத்தவரை சர்வதேச அளவில் பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஈயம், குரோமியம், காட்மியம்
போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று நீர்வள அமைச்சகத்தின்
அறிவிப்பு நம்மை மிரளச்செய்கிறது. அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டம் வட மாநிலங்களான பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான். தென் மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் அபாயகரமான இடத்தில் இருப்பது அங்கு வாழும் மக்களை கவல கொள்ளச செய்துள்ளது.
பா.செ. சிராஜுத்தீன்
மே 2016 "சமூகநீதி முரசு" மாத இதழ்
