இஸ்லாமிய
வணிகம் என்பது ஆகுமான வழியில் சந்தைபடுத்துவதர்க்கும், அதிலிருந்து இலாபம் ஈட்டுவதற்கும்
சிறப்பாக வழிகாட்டியிருக்கிறது. இஸ்லாமியர்களின் வாழ்வாதாரமாகவும் முஸ்லீம்களையும்
வணிகத்தையும் பிரிக்க முடியாத உந்து சக்தியாக திகழ்ந்துவருகிறது.குறிப்பாக பணம் ஈட்டுவதற்கு
ஆயிரம் வழிகள் இந்த அகண்ட உலகில் காணக்கிடக்கையில் ஆகுமான வழியில் வணிகம் செய்வதை மட்டுமே
இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் “சஹாபாக்கள்” என்று
அழைக்கப்படுகிற நபித் தோழர்களில் ஒருவரான “அப்துர ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ” அவர்கள்.
இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாசி என்று இனங்காட்டப்பட்ட பதின்மரில் ஒருவர்.
ஒருமுறை இவர் தனது நண்பர்களுடன் கலந்துரையாடலின் போது தான் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான
மூன்று கூறுகளை விளக்கினார்.
1. நான் குறைந்த இலாபத்தைக்
கூட அலட்சியப்படுத்தில்லை.
2. என்னிடம் விலை கேட்கப்பட்ட
எந்தப் பொருளையும் விற்பனை செய்வதில் காலம் தாழ்த்தியதில்லை.
3. நான் தவனை முறையில்
விலையை பெற்றுக் கொள்ளும் விதத்தில் விற்பனை செய்வதில்லை என்று கூறினார்.
இவர்
மக்காவில் வாழும்போது செல்வ சீமானாக இருந்தவர் தான் ஏற்றுக் கொண்ட மார்க்கத்தை மக்காவில்
நடைமுறைப்படுத்துவதற்கு எழுந்த எதிர்ப்பால் மதீனாவுக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்களுடன்
இடம் பெயர நேர்ந்தது. அதுவும் தன்னுடைய உடமைகள் அனைத்தையும் இழந்தவர்களாக, நிராயுதபானியாக,
இறையச்சத்தையும், வணிகத்தில் நேர்த்தியையும் மட்டுமே எடுத்துச் செல்ல நேர்ந்தது. ஏனெனில்
எல்லாவற்றையும் விட மிகப்பெரிய சொத்து இதுவாகத்தான் இருக்கும் என்பதினை முற்றிலும்
அறிந்திருந்தார் அப்துர ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி). அவர்களின் இந்த தியாகத்திற்கு
கீழ்கண்ட இறைவனின் வேத வரிகள் தூண்டுகோலாக அமைந்தது.
“நம்பிக்கை கொண்ட
என்னுடைய அடியார்களே! திண்ணமாக, என்னுடைய பூமி விசாலமானது. எனவே எனக்கெ நீங்கள் அடிபணியுங்கள்”
(திருக் குர்ஆன்
29 : 56)
அண்ணல்
நபி (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்தது
இஸ்லாமிய வரலாற்றின் வெற்றி என்று அறியப்பட்டாலும் அதில் ஏற்பட்ட தடைகளை இறையச்சத்தைக்
கொண்டு உடைத்தெறிந்தவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். ஏனெனில்
மக்கவாசிகளாகிய “முஹாஜிர்கள்”, மதீனாவாசிகளாகிய “அன்சாரிகள்” இருவரையும் உறவுக்கு அப்பாற்பட்ட
சித்தாந்த ரீதியில் ஒன்றினைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.
அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் மக்காவாசிகளையும் மதீனாவாசிகளையும் அவர்களின் குண, பன்பு நலன்களுக்கேற்ப
நண்பர்களாக ஒன்றிணைத்தார்கள். அதில் குறிப்பாக அப்துர ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள்
வணிகம் செய்து பொருளீட்டுவதில் பெரும் கெட்டிக்காரர் இவரை மதீனத்து சந்தையில் வெற்றி
காணுவதற்காக அவருக்கு உற்றத் துணையாக வணிகத்தில் சிறந்து விளங்கக்கூடிய அன்சாரி தோழர்
ஒருவர் தேவை. இதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தவர் தான் “ஸஅது இப்னு
அர்ரபிவு (ரழி) அவர்கள்.”
அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் இவர்கள் இருவருக்கு இடையே ஏற்படுத்திய நட்பில் இவர்கள் காட்டிய மகிழ்ச்சி
அளவற்றது. ஸஅது இப்னு அர்ரபீவு (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை
அழைத்து இவ்வாறு கூறினார். “என் அருமைச் சகோதரரே அல்லாஹ்வின் அருளால் மதீனத்து அன்சாரிகளிடையே
ஓரளவிற்கு செல்வம் உடையவன். என் செல்வங்களில் அனைத்திலும் சரிபாதியை உங்களுக்குத் தருகிறேன்”
என்று கூறியவராக தனது நண்பர் அழைத்துக் கொண்டு போய் அவரது உடமைகள் அனைத்தையும் காட்டினார்கள்.
அவை இரண்டும் என் இருபெரும் பழத் தோட்டங்கள் அவற்றுள் தாங்கள் எதை விரும்புகிறீர்களோ
அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதோ இருக்கிறது எனது வீட்டுடன் சேர்ந்த மனை இதில் உங்களுக்கு
உவப்பானதாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டே செல்கிறார்.இதற்கு
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் கனிவாகவும் தன்மையுடனும் கீழ்கண்டவாறு
கேட்டுக் கொண்டார்.
“எனக்கு
இவற்றுள் எதுவும் வேண்டாம் இது போன்றவைகளை எதிர்பார்த்து இஸ்லாத்திற்கு வரவில்லை. தயவு
செய்து எனக்கு கடை வீதிக்கு போகும் வழியை மட்டும் காட்டுங்கள்.” என்றார். இவரது இறையச்சமும்,
நேர்த்தியான இறைவழி வணிகமும் மட்டுமே இவ்வாறு கூறச் செய்தது என்றால் மிகையாகாது.
வணிகம்
என்று சொன்னாலே பெருமுதலீடு செய்யவேண்டும் அதற்காக வங்கியிலிருந்து வட்டியுடன் கூடிய
கடன் பெறவேண்டும், அப்படி பெறக்கூடிய கடனில் வணிகத்தை சிறப்பாக நடத்துவதற்கு இறைவழியையும்,
யதார்தத்தையும் மீற வேண்டும். தன் கீழ் பணியாற்றும் தொழிலாளியை அடிமைப்படுத்த வேண்டும்.
என்பதினை முற்றிலுமாக வெறுத்தவர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள். மதீனத்து
கைனூகா கடை வீதியில் தன்னிடம் இருந்த அற்ப நிதி ஆதாரங்களைக் கொண்டு எளிமையான முறையில்
தனது வணிகத்தை தொடங்கினார்.“மாவு, பன்னீர் போன்ற பொருட்களை கொள்முதல் செய்து விற்று
பண்டமாற்று முறையில் அதற்கு பகரமாக பாலாடைக் கட்டி, நெய் முதலான பொருட்களை ஈட்டினார்.”
இப்படியாக
வளர்ந்ததுதான் அவரது வணிகம் , இறைவனுடைய பொருத்தமும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலும்,
இவருடைய வணிகத்தில் நேர்மையும், எளிமையும், வாய்மையும், சிறப்பான திட்டமிடலும் இருந்த
காரணத்தால் வணிகம் மதீனத்து நகரில் பல்கிப் பெருகியது. இவருடைய நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள்
அரேபிய தீபகற்பத்தின் அகல, நீளங்களை தொட்டவாறு பொதி சுமைகளை சுமந்துகொண்டு பயணித்தன.
சிறந்த வணிக வளர்ச்சிக்கு உதாரணம் இவருடைய தொழில் உத்தியே ஒருநாள் வழக்கமாக ஆயிரம்
ஒட்டகங்களை வாங்கினார் சிறிது நேரத்தில் விலை பேசப்பட்டு வாங்கிய விலைக்கே விற்கப்படுகிறது.
அருகில் இருந்த நண்பர் ஒருவர் “இது ஆதயமற்ற வணிகமாக இருக்கிறதே” என்று வினவினார். அதற்கு
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் பதில். இந்த ஆயிரம் ஒட்டகங்களையும் தன்னிடத்தில்
வைத்திருந்தால் அதற்கு தீனியிடுதல், பாதுகாத்தல் போன்ற செலவை சேர்த்து நான் விற்க வேண்டும்.இப்பொழுது
அதற்கான தேவையில்லை. எனவே ஆயிரம் ஒட்டகங்களை விற்று விட்டு அதன் கழுத்தில் உள்ள தாம்பு
கயிற்றை மட்டும் எனதாக்கிக் கொண்டேன். இது ஒவ்வொன்றும் “ஒரு திர்ஹத்திற்கு” பெறுமானது
என்று கூறினார். (திர்ஹம் என்பது அரபு நாட்டு வெள்ளி நாணயம்), இத்தகைய நேர்த்தியான
வணிகம்தான் அவருடைய பொருளாதார வளத்திற்கு வழிகோழியது.
அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் சிறந்த வணிகராக மட்டுமில்லாமல், தலை சிறந்த ஈகை
குணம் உடையவர்களாக திகழ்ந்தார்கள். இஸ்லாம் மதீனத்து நகரில் தழைத்தோங்கி வளர்ந்து பல்கிப்
பெருகிக் கொண்டே இருந்தது. இதைப் பிடிக்காத “ரோமானியப் பேரரசு” மதீனாவைத் தாக்கி தகற்பதற்காக
பெரும் படையைத் திரட்டி வருவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதையறிந்த நபியவர்கள் அவர்களை எதிர்ப்பதற்காகவும் இஸ்லாமிய சமூகத்தை தற்காத்துக் கொள்வதற்காகவும்
பெரும்படையை திரட்டவும் அதற்கான பொருளுதவியை தனது தோழர்களின் உதைவியை நாட நேர்ந்தது.
அதில் நிதி அளித்ததில் முதலிரண்டு இடத்தை பிடித்ததில் ஒருவர்தான் அப்துர் ரஹ்மான் இப்னு
அவ்ஃப் (ரழி) அவர்கள்.இவரது
பங்காக 200 ஊக்கியா தங்கத்தையும், 40,000 தீனார்களையும் தந்து விட்டு அவர் கூறினார்
“இது எனது பாதி செல்வமாகும் மீதபாதியை எனது குடும்பத்திற்கும் மற்றும் வணிக மூலதனத்திற்கும்
விட்டுவைத்துள்ளேன்” என்று கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
இவருக்காக கீழ்கண்டவாறு இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். “நீர் எவற்றை உம்மோடு வைத்துக்
கொண்டீரோ அவற்றிலும், எவற்றை இறைவழியில் கொடுத்தீரோ அவற்றிலும் அல்லாஹ் அருள் வளம்
பெருகச் செய்வானாக…” என்றார்கள்.
அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வறியவர்களுக்கும், உறவினர்களுக்கும், இவரை எதிரியாக
கருதியவர்களுக்கும் தேவயென்று வரும்போது வாரி வழங்கினார். இவரின் இத்தகைய அரிய செயலுக்கு
கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனம் எழுப்பிய தாக்கமாகும்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு
உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும்
ஒரு வித்தைப் போன்றது;
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும்
நன்கறிபவன்.
(திருக்
குர்ஆன் 2 : 261)
இத்தகைய
வணிகத்திறமை கொண்டவராகவும், செல்வச்
சீமானாகவும், ஈகை குணம்
கொண்டவராகவும் இருந்த அப்துர் ரஹ்மான்
இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு தன்னுடைய 75 ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை
நீத்தார்.. இவர் இறந்த பின்பு இஸ்லாத்திற்கும், ஏழைகளுக்கும் வழங்கியது போக இஸ்லாமிய
சட்டப்படி இவருடைய சொத்தை அவருடைய நான்கு மனைவியருக்கும் , இருபது ஆண்மக்களுக்கும்,
எட்டு பெண் மக்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அறம், பொருள், ஈகை, இன்பம் என்று
இறைவழியில் தன் வாழ்வையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளை பின்பற்றுவதில்
தனது வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் திகழ்ந்தார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி)
அவர்கள்.
வணிகத்தை
இஸ்லாமிய வழியில் நடத்தினால் நட்டம் ஏற்படும் என்றும், தாம் சேர்கின்ற செல்வங்கள் ஈகையால்
வற்றிப் போகும் என்று நினைக்கிற குறுகிய உள்ளங்களுக்கு
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் ஓர் அழகிய முன் மாதிரி
பா.செ.
சிராஜுத்தீன்
பிப்ரவரி
2016 "சமூகநீதி முரசு" மாத இதழ்

No comments:
Post a Comment